டில்லி

டில்லி இந்திரா காந்தி விமானநிலையத்தின் ஒருசில குறும்புக்காரர்களால் விமானத்தை இயக்க முடியாமல் விமானி ஒருவர் தவித்துள்ளார்.

நேற்று காலை இண்டிகோ விமானம் ஒன்று மும்பையிலிருந்து டில்லிக்கு வந்துக் கொண்டிருந்தது.    விமானம் கீழே இறங்கும் நேரத்தில் விமானி கண்ட்ரோல் ரூமுக்கு அவசரமாக தொடர்பு கொண்டார்.  ஒரு லேசர் ஒளிக்கதிர் அவருடைய பார்வையை திசை திருப்புவதால் அவரால் விமானத்தை இறக்க முடியவில்லை என தெரிவித்தார்.

பிறகு கண்ட்ரோல் ரூமின் வழிகாட்டுதலின் பேரில் விமானம் தரை இறங்கியது.    இது குறித்து கண்ட்ரோல் ரூம் அதிகாரி ஒருவர், “லேசர் ஒளி விமானியில் பார்வையை திசை திருப்புவது என்பது அவருக்கு ஒரு தொல்லை மட்டும் இல்லை.    விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு உயிர் ஆபத்தையும் விளைவிக்கும் என்பதே உண்மை” என குறிப்பிட்டார்.   இது குறித்து டில்லி போலீசார் புகார் ஒன்றை பதிந்தனர்.

ஏற்கனவே டில்லி போலீசார் லேசர் ஒளியை விமான நிலையம் மற்றும் சுற்றுப்புறங்களில் தடை செய்துள்ளது.     ஆயினும் பல விமானிகள் ரன்வேயை நெருங்கும் போது இதே அனுபவம் தங்களுக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

போலீசார் விசாரித்ததில், பக்கத்தில் இருந்த ஒரு திருமண மண்டபத்தில் இருந்து இந்த லேசர் ஒளி வந்ததாகவும், ஒரு சில குறும்புக்காரர்கள் வேண்டுமென்றே அந்த லேசர் ஒளிக்கதிரை ரன்வேயின் உள்ளே செலுத்தியதாகவும் தெரிய வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.