புல்வாமா தாக்குதல் : ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதி சஜத்கான் டில்லியில் கைது

டில்லி

ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதியும் புல்வாமா தாக்குதலில் தொடர்பு உள்ளவனுமான சஜத்கான் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளான்.

 

சென்ற மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் பகுதியில் புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.   இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.  இந்த இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது புல்வாமா தாக்குதலை நிகழ்த்தினான்.

இந்த தாக்குதலுக்கு தொடர்புடைய தீவிரவாதி சஜத் கான் டில்லியில் வசித்து வருகிறான்.  அவன் டில்லியில் சாஜித் கான் என பெயர் மாற்றம் செய்துக் கொண்டு சால்வைகள் விற்று வந்தான்.  இவன் காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் 12 ஆம் தேதி வரை இருந்துள்ளான்.   அப்போது  முடாசிரின் என்பவனுடன் சஜத்கான் தொடர்பில் இருந்துள்ளான்.

புல்வாமா தற்கொலை தாக்குதலுக்கு வாகனம் மற்றும் வெடி மருந்துகளை ஏற்ஆடு செய்து கொடுத்த முடாசிரினுக்கு சஜத்கான் உதவி செய்துள்ளான்.    அது மட்டுமின்றி சஜத் கான் போலி மொபைல் எண்ணை பயன்படுத்தி பாகிஸ்தான் தீவிரவாதி யாசருடன் வாட்ஸ் அப் தொடர்பில் இருந்துள்ளான்.

டில்லி காவல்துறையினர் சஜத் கானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  சஜத்கானின் இரு சகோதரர்களும் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.   இவர்கள் இருவரும் பாதுகாப்பு படையினரால் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர்.   வாகனம் ஏற்பாடு செய்த முடாரின் கடந்த 11 ஆம் தேதி அன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

You may have missed