கர்நாடகாவில் பசுக்களை தீ மிதிக்கச் செய்யும் அவலம் : பசு பாதுகாவலர்கள் கவனிப்பார்களா?

மாண்டியா

ர்நாடகாவின் பல பகுதிகளில் மகர சங்கராந்தியை முன்னிட்டு பசுக்களின் தீமிதி விழா நடந்துள்ளது.

பசுக்கள் புனிதமானது எனவும் தெய்வம் மற்றும் தாய்க்கு ஒப்பானது எனவும் மக்களில் பலர் நம்பி வருகின்றனர். ஒரு சில அமைப்புக்கள் தங்களை தாங்களே பசுக் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு பசுக்களை காப்பாற்றுவதாக சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் பல இடங்களில் பசுக்களை காப்பதாக கூறி பலரை அடித்துக் கொன்றுள்ளனர். ஆனால் உண்மையில் அவர்கள் பசுப்பாதுகாப்பை விட சுய விளம்பரங்களுக்காகவே இவ்வாறு செய்வதாக மக்கள் நினைத்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாடபடுகிறது. கர்நாடக மாநிலத்தில் மகர சங்கராந்தி என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த சங்கராந்தி விழாவின் போது கர்நாடகாவில் நீண்ட நெடும் காலமாக ஒரு விபரீத விழா ஒன்று நடத்தப்படுகிறது.

சங்கராந்தி விழாவில் ஒரு பகுதியாக பசுக்கள் மாலை மற்றும்மணிகளைக் கொண்டு அலங்கரிக்கப் படுகின்றன. அதன் பிறகு ஊர் மக்கள் அனைவரும் கூடி இரவில் காய்ந்த வைக்கோல்களைக் கொண்டு ஒரு பெரிய தீயை எரிய வைக்கின்றனர்.

அதன் பிறகு அந்த அலங்கரிக்கப்பட்ட பசுக்கள் தீயினுள் துரத்தி விடப்படுகின்றன. பசுக்கள் வேறு வழியின்றி தீயில் ஓடி அல்லது குதித்துச் செல்கின்றன. மிகச் சில நிமிடங்களே இந்த விழா நடக்கிறது.

அடுத்த நாட்கள் முதல் பசுக்கள் காலையில் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்பட்டு காலையில் கட்டி வைக்கப்படுகின்றன. அத்துடன் மழைக்காலம் வந்த பிறகு மீண்டும் பசுக்கள் தொழுவத்துக்குள் அடைத்து வைத்து பராமரிக்கப் படுகின்றன.

இது போல் பசுக்களை தீயில் ஓட்டி விடும் பழக்கம் நீண்ட நெடும் காலமாக நடைபெறுவதாக கர்நாடக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விழாவின் வீடியோ ஒன்று முகநூலின் கர்நாடக விழாக்கள் என்னும் பக்கத்தில் வெளியாகி பலரும் பார்த்துள்ளனர். அத்துடன் அந்த பக்கத்தில் இந்த பழக்கம் கர்நாடகாவில் பல இடங்களில் பரவலாக நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நமக்கு எழும் கேள்விகள் எல்லாம் “இதை ஏன் எந்த பசுப் பாதுகாவலர்களும் பார்க்கவில்லை? அல்லது பார்த்தும் பாராமல் உள்ளனர்? பசுக்களைப் பாதுகாக்க சட்டத்தை கையில் எடுத்துக் கொள்பவர்கள் இந்த கொடூர பழக்கத்தை தடுக்க ஏன் சட்டத்தை நாடவில்லை? ” என்பதே ஆகும்.