மோடி தலைமையிலான ஆட்சி சர்வாதிகார ஆட்சி: கொல்கத்தா எதிர்க்கட்சி கூட்டத்தில் பாஜ எம்.பி. சத்ருகன் சின்ஹா ஆவேசம்

கொல்கத்தா:

கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.  மோடி தலைமையிலானஆட்சி சர்வாதிகார ஆட்சி என்றவர், இதற்காக தன்னை பாஜகவில் இருந்து நீக்கினால்  கவலை இல்லை என்றும்  தெரிவித்தார்.

மோடி அரசுக்கு எதிராக களமிறங்கி உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பயிற்சி திடலில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்றது.  அதைத்தொடர்ந்து 22 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வில் உள்ள மோடி அதிருப்தியாளர்களான வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் முன்னாள் நிதி மந்திரியாக பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியாக பணியாற்றிய சத்ருகன் சின்ஹா ஆகியோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் பேசிய சத்ருகன் சின்ஹா,  நான் பாரதிய ஜனதா கட்சியில்தான் இருக்கிறேன். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக பாரதத்தின் ஜனநாயகத்துக்காக இங்கு வந்திருக்கிறேன் என்றவர்,  மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கான அரசு அமைந்திருந்தது. தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் நீங்கள் உண்மையை மறைக்க இந்த நாட்டின் காவலாளி திருடனாக மாறிவிட்டதாகதான் மக்கள் பேசுவார்கள் என்று கூறினார்.

நான் சித்தாந்தங்களுடன் சமரசம் செய்துகொள்ளாவிட்டாலும், உண்மையின் பக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றவர், எனது மூத்த சகோதரர் யஷ்வந்த் சின்ஹா, இந்த கூட்டத்தில் பங்கேற்றதற்காக என்னை நிச்சயமாக பா.ஜ.க.வில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று குறிப்பிட்டார். ஆனால், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.