மும்பை

ற்போது நடைபெற்று வரும் மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் வரிசையில் முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் அமர்ந்துள்ளார்.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க இருந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் இணைந்து துணை முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.  பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது.   அஜித் பவார் திடீரென துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது கட்சிக்கு மீண்டும் திரும்பினார்.

அதையொட்டி தேவேந்திர பட்நாவிஸ் ராஜினாமா செய்தார்.  மகாராஷ்டிர மாநில ஆளுநர் சிவசேனா கூட்டணியின் தலைவரான உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியை ஏற்று ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.   அதையொட்டி அவர் வரும் 1 ஆம் தேதி அன்று பதவி ஏற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.   மகாராஷ்டிர சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

இன்றைய கூட்டத்தில் 288 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.   முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்  பதவி ஏற்றுள்ளார்.   துணை முதல்வர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்த அஜித் பவார் தற்போது தேசியவாத காங்கிரஸ் வரிசையில் அமர்ந்து பதவி ஏற்றுள்ளார்.  அஜித் பவார் மீண்டும் தங்கள் அணிக்கு வந்ததற்குப் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

தற்போது எந்தக் கட்சியின் அரசும் அமையாத நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்று வருகின்றனர்.  மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இது ஒரு அதிசய நிகழ்வாகும்.