மணலியில் இருந்து நள்ளிரவில் பக்கத்து மாநிலத்துக்கு  அகற்றப்படுகிறது, நைட்ரேட்..

சென்னை மணலியில் சரக்கு கண்டெய்னர் முனையத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 700 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட் , அந்த பகுதி மக்களின் தூக்கத்தைத் தொலைத்துள்ளது.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட், வெடித்து பெரும் உயிர் இழப்பை ஏற்படுத்தியதால், மணலியில் கடந்த 5 ஆண்டுகளாக உள்ள இந்த ரசாயனப்பொருளைப்  பாதுகாப்பு கருதி அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நைட்ரேட்டை ஏலம் எடுத்துள்ள நிறுவனம், திங்கள்கிழமை அன்று இந்த ரசாயனப் பொருளைப் பக்கத்து மாநிலத்துக்கு எடுத்துச் செல்லும் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

முறையான சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள வாகனங்களில் பாதுகாப்பு கருதி நள்ளிரவு நேரத்தில் அமோனியம் நைட்ரேட் பொருள் அகற்றப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘’மணலியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அமோனியம் ,உரம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ரகத்தைச் சேர்ந்தது என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவை இல்லை’’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

-பா.பாரதி.