நொய்டா

நொய்டா பகுதியில் உள்ள கசேரா என்னும் சிற்றூரில் பாஜகவினருக்கு அனுமதி இல்லை என போர்ட் வைக்கப்பட்டுள்ளது.

நொய்டா பகுதியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் கசேரா.   இந்த சிற்றூரை பாஜக மக்களவை உறுப்பினரும் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சருமான மகேஷ் சர்மா தத்து எடுத்துள்ளார்.    மகேஷ் சர்மா கவுதம்புத்தா நகர் தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினர் ஆவார்.

இவர் இந்த சிற்றூரை தத்து எடுத்ததாக அறிவித்த பிறகு ஒரு முறை கூட இங்கு வரவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.    அது மட்டுமின்றி ராணுவ நடவடிக்கைகள் குறித்து புகழும் பாஜகவினர் இந்த ஊரில் வீர் சக்ரா விருது பெற்ற மறைந்த வீரர் ஞான் சந்துக்கு நினைவிடம் அமைக்க கோரியதை இது வரை அனுமதிக்கவில்லை எனவும் பலர் கூறுகின்றனர்.

இந்த சிற்றூரில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கும் கிராம வாசிகளுக்கும் இடையில் 13 வருடங்களாக தகராறு உள்ளது.   இந்த நிறுவனம் கையகப்படுத்தி உள்ள நிலங்களுக்கு இது வரை இழப்பீடு வழங்காததால் கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பெரும் போராட்டம் வெடித்தது.

அந்த போராட்டத்தின் எதிர் விளைவாக நிறுவனம் அங்குள்ள விளைநிலங்களில் உள்ள பயிர்களுக்கு தீ வைத்துள்ளது.  இது குறித்து  காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.    அத்துடன் இந்த ஊரில் அமைக்கப்பட்டுள்ள 60 சோலார் விளக்குகளில் பேட்டரி வேலை செய்யாததையும் அரசு கண்டு கொள்ளாம்ல இருக்கிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் 2018 அக்டோபர் நடந்த போராட்டத்தின் போது பாஜகவினர் உள்ளே நுழைய அனுமதி இல்லை என சிற்றூர் நுழைவாயிலில் போர்ட் ஒன்றை அமைத்துள்ளனர்.    இன்று வரை மக்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்காததால் போர்ட் அகற்றப்படாமல் உள்ளது.

இது குறித்து கிராம மக்களில் சிலர், “தேர்தல் பிரசாரத்துக்கு எந்த ஒரு பாஜகவினரும் கிராமத்தின் உள்ளே வரக்கூடாது என்பதற்காக அந்த போர்டை அகற்றாமல் வைத்துள்ளோம்.   நாங்கள் அனைவரும் பாஜகவுக்கு எதிராக நோட்டாவுக்கு வாக்களிக்கலாமா என யோசித்து வருகிறோம்” எனதெரிவித்துள்ளனர்.