மைசூரு

மைசூருவில் வீட்டின் பின்புறமும், மொட்டை மாடியிலும் கஞ்சா செடிகள் வளர்த்து வந்த ஒரு கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.  அவர் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

மைசூரு போலிசுக்கு கிடைத்த ஒரு தகவலின்படி துணை கமிஷனர் தர்மப்பா மற்றும் இன்ஸ்பெக்டர் நாகேகவுடா தலைமையில் ஒரு டீம் பொகாடி செகண்ட் ஸ்டேஜில் இருந்த 62 வயதான ஒரு ஆடிட்டரின் வீட்டை சோதனை இட்டனர்.  சோதனையின் போது அந்த வீட்டில் 4.5 கிலோ கஞ்சா, மற்றும் கஞ்சா விதைகள், 20 ஹுக்காக்கள், 2 பண்டல் சிகார் பேப்பர்கள், உரிமம் பெறாத ஒரு துப்பாக்கி, 6050 ரூபாய் ரொக்கம் ஆகியவை சிக்கின.

பிடிபட்ட ஆடிட்டர் கஞ்சாவை வளர்த்து விற்பனை செய்ததாக தெரிய வந்துள்ளது.  அவர் வீட்டின் பின்புறத்திலும் மொட்டை மாடியிலும் எக்கச்சக்கமாக கஞ்சாச் செடிகள் வளரத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அக்கம் பக்கத்தினருக்கு இவர் கஞ்சா வியாபாரி என்பதே தெரியாமல் இருந்துள்ளது.

பிடிபட்ட ஆடிட்டருக்கு 1996ல் மனைவியுடன் விவாகரத்து ஆகியுள்ளது.  குழந்தைகள் இல்லாத இவர் தனியாக வசித்து வந்துள்ளார்.  அக்கம் பக்கம் வீடுகள் சிறிது தள்ளியே இருந்ததால் இவருடைய வியாபாரம் யாருக்கும் தெரியவில்லை.  சோதனையின் போது ஆடிட்டரை தவிர வேறு யாரும் இல்லையென்றாலும், அங்கு இருந்த சிகார் பேப்பர், மற்றும் ஹுக்காவைப் பார்க்கும் போது இவர் ஒரு பெரிய கஞ்சா பார் நடத்தி இருப்பார் என போலீசார் ஐயமுற்றனர்.

இவர் மனைவியை பிரிந்ததில் இருந்தே இந்த வியாபாரத்தை தொடங்கி உள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர்.  இதற்கு முன்பு இவர் சி ஏ படிக்கும் மாணவர்களுக்கு தங்க இடம் அளித்து பணம் பெற்று வந்ததாகவும், இவருடைய மனைவியின் பிரிவுக்கு பின் இவர் கஞ்சா புகைக்கு அடிமை ஆனதால் மாணவர்கள் இங்கிருந்து சென்றுவிட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

போலீசாரிடம் ஆடிட்டர் தனக்கு பிழைக்க வழி இல்லாததால் இந்த வியாபாரம் செய்தததை ஒப்புக்கொண்டுள்ளார்.  நீதிமன்றத்தில் ஒப்புவிக்கப் பட்ட இவரை காவலில் வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.