தேசிய குடியுரிமை  பதிவேடு விவகாரத்தில் மோடி  மாற்றிப் பேசுகிறார்  : சரத் பவார்

டில்லி

தேசிய குடியுரிமை  பதிவேடு விவகாரத்தில்  மோடி மாற்றிப் பேசுவதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார்.

நேற்று டில்லியில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “இஸ்லாமியர்கள் தேசிய  குடியுரிமைப் பதிவேடு குறித்துப் பயப்படுகின்றனர்.  கடந்த 2014 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அது குறித்து விவாதிக்கவில்லை.   ஆம்.  இது குறித்து எப்போதுமே மத்திய அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ விவாதிக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “பிரதமர் ஒரு பொதுக்கூட்டத்தில் தேசிய குடியுரிமைப் பதிவேடு குறித்து விவாதிக்கவில்லை எனக் கூறுகிறார்.  ஆனால் பிரதமர் நாடெங்கும் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கப்படும் என மாநிலங்களவையில் தெரிவித்த போது நானும்  பிரபுல்  படேலும் அவையில் இருந்தோம்.  அத்துடன் இந்த ஆண்டு ஜனாதிபதி உரையிலும் அது குறித்துக் கூறப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி அமைச்சரவையிலோ நாடாளுமன்றத்திலோ இது குறித்து விவாதிக்கவில்லை எனச் சொல்வது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.  அமைச்சரவையில் இது குறித்து விவாதிக்கப்பட்டதா என்பதை என்னால் சொல்ல முடியாது.   ஆனால் அமைச்சரவையில் விவாதிக்கப்படாத எந்த விவகாரமும் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படுவதில்லை என்பதை நான் அறிவேன்.

அது மட்டும் அல்ல நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கம் குறித்து பேசியுள்ளார்  அப்போது அந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.  அவ்வாறு இருக்க பிரதமர் ஏன் இவ்வாறு தெரிவித்தார் என்பது மேலும் ஆச்சரியமாக உள்ளது” எனக் கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி