ஒரு பக்கம் வெள்ளம் மறுபக்கம் வறட்சி : நாமக்கல் மாவட்ட நிலை

நாமக்கல்

நாமக்கல் மாவட்டதில் ஒரு பகுதியில் வெள்ளத்தால் பயிர்கள் அழிவும் மற்றொரு பகுதியில் நீரின்றி பயிர்கள் வாடுவதும் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடும் மழை காரணமாக காவிரி அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.    அந்த நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.   ஏற்கனவே மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் வரும் காவிரி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.   இதனால் அமராவதி மற்றும் பவானி பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.   பல விளை நிலங்களில் வெள்ள நீரால் பயிர்கள் பாழாகி உள்ளன.  பலர் வீடிழந்து பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.  இங்குள்ளவர்களுக்கு அரசு உணவு மற்றும் குடிநீர் அளித்து வருகிறது.  பல இடங்களில் தென்னந்தோப்புகள், வாழைத்தோப்புகள், நிலக்கடலை பயிர்கள் ஆகியவை முழுவதுமாக பாழாகி உள்ளன.

இந்த வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெகு அருகாமையில் உள்ள அரூர் உள்ளிட்ட பல  கிராமங்களில் நீர் வரத்து இல்லாமல் பயிர்கள் வாடி வருகின்றன.   ஆற்றின் கரையில் இருந்து சுமார் 4 கிமீ தூரமே உள்ள நிலங்களில் வெற்றிலைக் கொடிகளும் வாழை மரங்களும் நீரின்றி கருகும் நிலையில் உள்ளன.   அந்த இடங்களை சுற்றி பனை மரங்கள் மட்டுமே வளர்ந்துள்ளன.