ராஞ்சி, ஜார்கண்ட்

ரு பெண் நோயாளிக்கு இடது சிறுநீரகத்தில் உள்ள கற்களை எடுக்க செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை வலது சிறுநீரகத்தில் செய்யப்பட்டதாக பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

ராஞ்சியை சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் மனைவி குடியா பாய்,  பிரதீப்குமார் டிரைவராக பணி புரிகிறார். ஏழ்மை நிலையில் வாழ்க்கை நடத்துகிறார்.  குடியா பாய்க்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு ஒரு தனியார் மருத்துவமனையை பிரதீப் அணுகினார்.  அங்கு பரிசோதனை செய்ததில் குடியாவுக்கு வலது சிறுநீரகத்தில் கற்கள் உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறினர்.

அறுவை சிகிச்சைக்கு ரூ. 40000 செலவழிக்க வசதியில்லாத பிரதீப், தனது மனைவியை அரசு மருத்துவமனையான ராஜேந்திரா இன்ஸ்டிட்யூட் ஆஃஃப் மெடிகல் சயின்சஸ் மருத்துவமனையில் சேர்த்தார்.  இங்கும் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு பின் அறுவை சிகிச்சை நடை பெற்றது.  அறுவைச் சிகிச்சைக்குப் பின் தனது மனைவியின் உடலில் வலது பக்கத்தில் தையல் போடப்பட்டிருப்பதைக் கண்டு பிரதீப் அதிர்ந்தார்.

உடனடியாக மருத்துவமனையின் அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை தெரிவித்தார்.  யூராலஜி துறையின் தலைவர் இது இளம் மருத்துவர்கள் செய்த தவறு என தட்டிக் கழித்து விட்டார்.  அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பெண் மருத்துவர் வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறி அவர்களை மருத்துவமனையை விட்டு வெளியேற்றி விட்டார். இது பற்றி மேலதிகாரிகளிடம் பிரதீப் புகார் அளித்துள்ளார்.

ஒரு வாரம் முன்பு, ஜார்கண்ட் மாநிலத்தில்  இறந்து போன ஒருவருக்கு மரண ஊர்தி அளிக்க மருத்துவமனை மறுத்து விட்டதால் அந்தப் பிணத்தை அவர் சகோதரரும், சகோதரர் மனைவியும் தூக்கிச் சென்ற பரிதாபம் நிகழ்ந்தது தெரிந்ததே.