பகத் சிங் தூக்கு : மவுனம் காத்த சாவர்க்கர் – காப்பாற்ற முயன்ற நேருவும் நேதாஜியும்

டில்லி

சுதந்திரப் போராட்ட மாவீரன் பகத்சிங் தூக்கிடும் போது சாவர்க்கர் மவுனமாக இருந்ததாக நேஷனல் ஹெரால்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் கடந்த 1907 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி பிறந்தார்.   லாலா லஜபத் ராய் மரணத்துக்கு காரணமான ஜேம்ஸ் ஸ்காட் என்னும் ஆங்கிலேய அதிகாரியை பகத் சிங் மற்றும் அவருடைய கூட்டாளிகள் இணைந்து கொலை செய்த வழக்கில் பகத் சிங்குக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த கொலைக்கு மகாத்மா காந்தி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஜவகர்லால் நேரு இந்தக் கொலையை ஆதரித்து அறிக்கை விடுத்தார்.   ஆயினும் தற்போதைய பாஜக ஆட்சியில் நேருவின் இந்த அறிக்கை மறைக்கப்பட்டு வருகிறது.   மேலும் அவருடைய விடுதலைக்கு இந்துத்வா தலைவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் மிகவும் பாடுபட்டதாகவும் ஆயினும் பகத் சிங் தூக்கிடப்பட்டதாகவும் தொடர்ந்து பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நேஷனல் ஹெரால்ட் செய்தி ஊடகம், “எந்த ஒரு மதத் தலைவரும் பகத் சிங் மற்றும் அவர் கூட்டாளிகளின் வழக்கு பற்றியோ தண்டனை பற்றியோ வாய் கூட திறக்கவில்லை என்பதே சரித்திரம் அறிந்த உண்மையாகும்.  அதே வேளையில் ஜின்னா உள்ளிட்ட பலர் பகத் சிங் தூக்கு தண்டனைக்கு எதிராகவும் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் பேசிஉள்ளனர்.

சாவர்க்கர் இந்த விவகாரத்தில் வாயை திறக்காமல் மவுனமாக இருந்தார்.  அதே வேளையில் ஈ வே ரா பெரியார் தமிழ்ப்  பத்திரிகையான குடியரசு பத்திரிகையில் இந்த தண்டனையை எதிர்த்து தலையங்கம் வெளியிட்டார்.   அது மட்டும் இன்றி நான் ஏன் நாத்திகனானேன் என்னும் பகத் சிங் எழுதிய புத்தக தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.   உண்மையில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்த தண்டனையை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

அத்துடன் ஜவகர்லால் நேரு மற்றும் நேதாஜி ஆகியோர் அதிக அளவில் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.   பகத் சிங் நேரு மற்றும் நேதாஜியின் சோசலிசக் கொள்கையின் மீது மிகவும் ஆர்வம் கொண்டுதை பல முறை தெரிவித்துள்ளார்.  நேதாஜியைப் புரட்சியாளர் எனவும் நேருவைச் சீர் திருத்த வாதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் இளைஞர்கள் நேருவின் பகுத்தறிவு அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்  என அறிவுறுத்தி உள்ளார்.” எனச் செய்தி வெளியிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி