‘சாமி’ இல்லை என்ற கருணாநிதிக்கு ரூ.30லட்சம் செலவில் கோவில்! நாமக்கல் பகுதி மக்கள் பூமிபூஜை

நாமக்கல்:

‘சாமி’ இல்லை என்று தனது காலம் முழுவதும் கூறி வந்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நாமக்கல் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் ரூ.30 லட்சம் செலவில் பிரமாண்டமான கோவில் கட்ட திட்டமிட்டு உள்ளனர்.

சாமி, கடவுள் இல்லை என்று நாத்திகமும், பகுத்தறிவும் பேசி வந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு கோவில் கட்ட முற்பட்டுள்ளது,  பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோவில் கட்டும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. இதில், நாமக்கல் அருகே உள்ள  ராசிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  வசித்து வரும் அருந்ததியர் இன மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கருணாநிதியின் ஆட்சியின்போது,  அருந்ததியினர் மக்களுக்கு 3% இட ஒதுக்கீடு மற்றும் அவர்களுக்கு நிரந்தர பணி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாகி கொடுத்திருந்த நிலையில், அதற்க நன்றி கடனாக  கோவில் கட்ட வேண்டும் என ராசிபுரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமமான குச்சிக்காடு பகுதியில் உள்ள மக்கள் முடிவு செய்து, கோவில் கட்டும் பணிக்கு அதே ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களால் முடிந்த பண உதவி மற்றும் பொருளுதவி செய்து வருகின்றனர்.

தற்போது ஓரளவு நிதி வசூலாகி உள்ள நிலையில், சுமார் 30 லட்சம் மதிப்பீட்டிலான கோவிலை கட்டுவதற்கான பூமி பூஜை அந்த ஊர் மக்கள் நடத்தியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், திட்டமிட்டபடி, கருணாநிதி கோவில், மிக விரைவில் கோவில் கட்டி முடிக்கப்படும் என  பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.