அத்திவரதர் தரிசன நேரம் இரவு 10மணி வரை நீட்டிப்பு! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

காஞ்சிபுரம்:

த்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின்  கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தரிசன நேரம் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்  கோவில் குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்திவரதர் 40 ஆண்டு களுக்கு பிறகு தற்போது தண்ணீரை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்துள்ளது.  அவரை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் சாரை சாரையாக காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர்.

அத்திவரதரை தரிசிக்கும் நேரம், முதலில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி நேரம் அறிவிக்கப்பட்டது. பின்னர், அது காலை  காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், கருட சேவை காரணமாக, கடந்த சில நாட்களாக அத்திவரதர் தரிசன நேரம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மீண்டும் நேரம் நீட்டித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.