இன்று அதிகாலை 2.30 மணியளவில் #அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பின்பு 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவில் காஞ்சியில் உள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவில் ராஜகோபுரம், மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

மூலவரான வரதராஜப் பெருமாள், பெருந்தேவி தாயாருடன் அருள் பாலிக்கிறார். வேகவதி ஆறு, அனந்த புஷ்கரணி ஆகியவை அங்கு உள்ளன. இந்த அனந்த புஷ்கரணியில் தான் அத்திவரதர் சயனித்தபடி அருள்பாலிக்கிறார்.

ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு, நாராயணனைத் தாங்கி நின்றமையால், இத்தலம், ‘அத்திகிரி’ என, அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு தங்க பல்லி தரிசனம் .

அத்தி வரதப் பெருமாளை, வெள்ளித்தகடு பதித்த பெட்டியில், சயனக் கோலத்தில், அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும், அவரது ஆயுள் காலத்திற்குள் ஒருமுறை அல்லது இருமுறை தான் அத்தி வரதரை தரிசிக்க முடியும். கடந்த, 1854, 1892, 1937, 1979 ஆகிய ஆண்டுகளில், அத்தி வரதர் தரிசன உற்சவம் நடந்தது.

இந்த நுாற்றாண்டில், இந்தாண்டில் முதன் முறையாக, ஜூலை, 1ம் தேதி, அனந்த தீர்த்தத்தில் இருந்து வெளியே வருகிறார். அத்தி வரதரை, வசந்த மண்டபத்தில், 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பர்.

முதலில், சயனக் கோலத்திலும், பின், நின்ற கோலத்திலும் தரிசனம் தந்தபின், மீண்டும் அனந்த தீர்த்தத்தில் பெருமாள் சயனித்தபடி, அருள்பாலிப்பார்.

அனந்த புஷ்கரணி அத்தி வரதர் :

இப்போது, கோவில் இருக்குமிடம், ஒரு காலத்தில் அத்தி மரங்கள் சூழ்ந்த மலையாக இருந்தது எனவும் அங்கு, பிரம்மன் யாகம் செய்தபோது, அத்தி வரதர் தோன்றியதாகவும் , காலப்போக்கில், அத்திகிரி வரதரை பூஜித்த அர்ச்சகர் ஒருவரது கனவில் வந்த அத்தி வரதர், யாக குண்டத்திலிருந்து வந்ததால், தன் உடல் எப்போதும் தகிப்பதாகவும், தன்னை நிரந்தரமாக புஷ்கரணியில் எழுந்தருளச் செய்யும்படியும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்கரணியில் எழுந்தருளச் செய்தால், மூலவராக யாரை தரிசிப்பது என்று, அர்ச்சகர் வினவ, பழைய சீவரத்தில் உள்ள வரதரை பிரதிஷ்டை செய்து, பூஜித்துக் கொள்ளும்படியும், தன்னை, 40 ஆண்டிற்கு ஒருமுறை வெளிக் கொண்டு வந்து, ஒரு மண்டல காலம் பூஜிக்கும் படியும் கட்டளையிட்டுள்ளார்.
அதன்படியே, அத்தி வரதரை, தண்ணீருக்குள் எழுந்தருளச் செய்ததாகவும் கூறப்படுகிறது. பெருமாள் எழுந்தருளியுள்ள அனந்த புஷ்கரணி, எப்போதும் வற்றியதில்லை.மேலும், ஆண்டிற்கு ஒரு குறிப்பிட்ட தினத்தன்று, வரதராஜப் பெருமாள், காஞ்சியிலிருந்து, பழைய சீவரத்திற்கு பாரிவேட்டை செல்வது, இதன் அடிப்படையில்தான் என்றும் கூறப்படுகிறது.

: