அத்திவரதருக்கு முத்தங்கி சேவை: திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஏற்பாடு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதருக்கு, திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் முத்தங்கி சேவை நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், பெருமாள் நின்ற திருக்கோலமாக மேற்கு முக மண்டலமாக நின்று அருள் பாலிக்க, பிரம்மா செய்த யாகத்திற்கு மகிழ்ந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜர் என்று பெருமாள் அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன. தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது. அதில் தான் மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி அத்திரவரதர் வெளியே எடுக்கப்பட்டு, பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளார். அவரை காண தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் அத்திவரதருக்கு முத்தங்கி சேவை நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகளும் இன்று மேற்கொள்ளப்பட்டன.