காஞ்சிபுரத்தில் அதிகாலை முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு நீல நிற பட்டு உடுத்தி அத்திவரதர் காட்சியளிக்கும் நிலையில், அவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெறுகிறது. நேற்று வரை சயன கோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர், இன்றிலிருந்து ஆகஸ்ட் 17ம் தேதி வரை நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் காரணமாக நேற்று மாலை முதல் அதிகாலை வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டது. சயன கோலத்தில் அத்திவரதரை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் நேற்று தரிசனம் செய்தனர். நேற்று வரை மொத்தம் 47 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

இத்தகைய சூழலில், இன்று அதிகாலை முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு நீல நிற பட்டு உடுத்தி அத்திவரதர் ஆருள்பாலித்து வருகிறார். அவரை காண நள்ளிரவு முதல் காத்திருந்து பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். தொடர்ந்து அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது தரிசன வரிசையில் கூட்டம் அதிகம் இருந்தால், பக்தர்களை அவ்வப்போது நிறுத்தி, கூட்டம் குறைவான பின்னர் தரிசனத்திற்கு அனுப்ப வடக்கு மாட வீதியில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இப்பந்தலில் மட்டும் 10 ஆயிரம் பக்தர்கள் நிற்கும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் பக்தர்களுக்கான அடைப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.