அதிரடி சாதனைகள் புரிந்த அத்திவரதர்! 47நாட்களில் 1கோடி பேர் தரிசனம்!

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் அதிரடி சாதனைகள் புரிந்துள்ளார். அவர் அருள்பாலித்த 47 நாட்களில் 1கோடி பேர் அவரை தரிசித்து ஆசி பெற்றுச் சென்றுள்ளனர். அதே வேளையில் ரூ.8 கோடி ரூபாய் வசூலித்து வசூலிலும் சாதனை புரிந்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் அருள்பாலிக்கும்  அத்திவரதர் தரிசன விழா கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த முறை அத்திவரதர்  31 நாட்கள் சயன கோலத்திலும், 17 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் அளித்தார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் நாடு முழு வதும் இருந்து பக்தர்கள் சாரை சாரையாக காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்துவந்தனர். வாழ் நாளில் ஒரு முறையாவது அவரை பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் தினமும் லட்சக்கணக்கானோர் காஞ்சிபுரத்தில் திரண்டதால், அந்த மாவட்டமே மக்கள் கூட்டத்தில் சிக்கி திணறியது.

அத்திவரதர் தரிசனத்தை காண சயன கோலத்தில் பார்ப்பதை விட நின்ற கோலத்தில் அவரைக் காண பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்தது.  ஆகம விதிகளின்படி கடைசி நாளான  இன்று (சனிக்கிழமை) கண்டிப்பாக அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என்பதால் கடைசி நாள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 48 நாட்களாக இருந்த அத்திவரதர் தரிசனம் 47 நாளாக குறைக்கப்பட்டது.

நேற்று முந்தைய தினமான (ஆகஸ்டு15) விடுமுறை நாளில் மட்டும் அத்திவரதரை தரிசிக்க  4½ லட்சம் பேர் திரண்டிருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாலை 5 மணிக்கு மேல் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  தொடர்ச்சியாக நள்ளிரவு 2 மணி வரையில் பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கடைசி மற்றும் 47-வது நாளான நேற்று  அத்தி வரதருக்கு ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். அத்திவரதரை காண்பதற்காக விடிய விடிய காத்திருந்த பக்தர்களை போலீசார் பகுதி பகுதியாக பிரித்து வைத்து அனுப்பினர். இருந்தாலும் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க காவல்துறையினர் பெரும்பாடு பட்டனர். பெண்கள் பலர் கை குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்களுக்கு போட்டியாக முதியவர்களும் அத்திவரதரை காண ஆசையோடு வந்திருந்து தரிசித்துச் சென்றனர்.

அத்திவரதரை இந்த 47 நாட்களில் 1 கோடி பேர் தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி தந்த போது 31 நாட்களில் 50 லட்சம் பேர் தரிசனம் செய்திருந்த நிலையில், அவர்  நின்ற கோலத்தில் அருளாசி வழங்கிய 16 நாளிலும் சுமார் 50 லட்சம் பேர் திரண்டு வழிபட்டுள்ளனர்.

நள்ளிரவுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைந்தது.   இதனை தொடர்ந்து நடை சாத்தப்பட்டு அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. இன்று அத்திவரதருக்கு 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மாலைநேர பூஜையை முடிந்த பிறகு இன்று இரவு  அத்திவரதர் அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்படுவார்.

அத்திவரதர் தரிசனத்தக்கு வந்த பொதுமக்கள் செலுத்திய காணிக்கை மட்டும் ரூ.8 கோடி வசூலிலாகி உள்ளதாகவும், மேலும் பலர் உண்டியலில்வ தங்கம், வெள்ளிப் பொருட்களை காணிக்கை செலுத்திய நிலையில், அதன் மதிப்பு பின்னரே தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

இதன் பின்னர் அத்திவரதரை 40 ஆண்டுகள் கழித்தே வெளியில் எடுப்பார்கள். அத்திவரதரை இப்போது தரிசனம் செய்யாதவர்கள் இனி 2059-ம் ஆண்டில்தான் தரிசிக்க முடியும்.

அத்திவரதர் தரிசனைத்தையொட்டி தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. தமிழகம் முழுவதும் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அறநிலைய துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தண்ணீர், மோர் போன்றவை வழங்கப்பட்டன. மாற்று திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

பக்தர்களை ஒழுங்குபடுத்த தடுப்பு கட்டைகள், பேரிக்கேடுகள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்க ளுக்கு கழிப்பறை வசதிகள், குடிநீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்திவரதரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, நடிகர்கள் ரஜினி காந்த், பிரபு, நடிகை நயன்தாரா, ஆர்த்தி, இயக்குனர் அட்லி, அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அரசியல் கட்சியை சேர்ந்த எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

கார்ட்டூன் கேலரி