கோவா:

கோவாவில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை 3-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் தொடரின் இறுதி ஆட்டம் கோவாவில் இன்று நடைபெற்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆட்டம் மைதானத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே கொல்கத்தா அணியின் ஜாவி ஹெர்னாண்டஸ் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன்பிறகு, முதல் பாதி ஆட்டத்தில் சென்னை அணியின் கோல் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. இதனால், முதல் பாதி ஆட்டநேர முடிவில் கொல்கத்தா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் கொல்கத்தா அணி மீண்டும் தொடக்கத்திலேயே ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியது. 48-வது நிமிடத்தில் அந்த அணியின் எடு கார்சியா 2-வது கோலை அடித்தார். இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்ததால் சென்னையின் எஃப்சி அணியின் நெருக்கடி மேலும் அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி வீரர் வால்ஸ்கிஸ் அணியின் முதல் கோலை அடித்தார். எனவே, இதன்பிறகு இறுதி ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஆனால், சென்னையின் கோல் அடிக்கும் முயற்சிகள் மீண்டும் தோல்வியிலேயே முடிந்தன. இதையடுத்து, கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில், சென்னையின் எஃப்சி அணி கோல் அடித்து சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணிக்கான முதல் கோலை அடித்த ஜாவி ஹெர்னாண்டஸ் மீண்டும் ஒரு கோலை அடித்து அசத்தினார். இதன்மூலம், கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதிலும் சென்னையின் எஃப்சி அணி கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கொல்கத்தா அணி 3ஆவது முறையாக சாம்பியனானது.