வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் எனவும், தேனி, திண்டுக்கல் மாவட்டங் களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வட கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக் காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. சென்னை யில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப தாவது,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கன மழையும், வட கடலோர தமிழகம் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, தாமரைப் பக்கம் , புழல், பூண்டி பகுதிகளில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது,  இதனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.