ஏடிபி சர்வதேச டென்னிஸ் அரங்கில் 1000 வெற்றிகள் – ரஃபேல் நாடல் சாதனை!

பாரிஸ்: ஏடிபி டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், உலக அரங்கில், மொத்தம் 1000 வெற்றியைப் பெற்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நாடல்.

தற்போது, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர். இத்தொடரின் ஒரு போட்டியில், பெலிசியானோவை தோற்கடித்தபோது இந்த சாதனையைப் புரிந்தார் நாடல்.

‘டை பிரேக்கர்’ வரை சென்ற இப்போட்டியை 4-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார் நாடல்.

ஏடிபி டென்னிஸ் சர்வதேச அரங்கில், 1000 வெற்றிகள் என்ற சாதனையை இதற்கு முன்னர் 3 பேர் செய்துள்ளனர். அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ்(1274 வெற்றிகள்), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்(1242 வெற்றிகள்) மற்றும்  அமெரிக்காவின் இவான் லென்டில்(1068 வெற்றிகள்) ஆகியோர் சாதித்துள்ளனர்.

தற்போது அந்த வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் நாடல். தனது இந்தச் சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் நாடல்.