கலையின் மீதான தாக்குதல் சுதந்திரத்தின் மீதான தாக்குதலே: நீதிபதி சந்திரசூட்

மும்பை: கலை என்பது மனிதகுலத்தின் கூட்டு முன்னேற்றத்திற்கான கருவி என்றும், ஆனால் கலைக்கான சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்றும் பேசியுள்ளார் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.

அவர் கூறியுள்ளதாவது, “சுதந்திரம் என்பது ஒரு நாட்டாலோ, மக்கள் கூட்டத்தாலோ அல்லது கலையாலோ நசுக்கப்படும்போது ஆபத்து நிகழ்கிறது. மாறுபட்டு பேசும், சிந்திக்கும், உண்ணும், உடை உடுத்தும் மற்றும் நம்பும் மக்களுக்கு எதிராக நஞ்சை உமிழும் ஒரு களமாக சுதந்திரம் இன்றைய நிலையில் மாறியுள்ளது.

பண்டிட் குயின், மி நாதுராம் கேட்சே போல்டாய், பத்மாவதி மற்றும் போபிஷ்யோதர் பூட் ஆகிய படங்கள் அரசுகளால் தடைசெய்யப்படுகின்றன. அப்படங்களில் மறைந்திருக்கும் உண்மைகள் அரசியல்வாதிகளை தொந்தரவு செய்கின்றன அல்லது அவர்களுக்கு அச்சமூட்டுகின்றன.

தற்போதைய வழக்கத்தில் இருக்கும் நடப்புகளை கலை என்பது கேள்விக்குள்ளாக்குகிறது. கலையின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகங்களின் குரலாய் பல நேரங்களில் கலைகள் வெளிப்படுகின்றன.

எனவே, கலை என்பது வளப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும். பலநேரங்களில் கலை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிப்பதில்லை. அவர்களின் உண்மையான வாழ்க்கை அதில் புறக்கணிக்கப்படுகிறது. இதற்கு காரணம், கலைத்துறையை ஆதிக்கவாதிகள் ஆக்ரமித்துள்ளதே” என்று பேசினார் நீதிபதி சந்திரசூட்.