பாஜக பிரமுகர் மீது கொலை வெறித் தாக்குதல்.. ஒருவர் கைது

ஆம்பூர்:

பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டது வேலூர் பகுதயில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சாணாங்குப்பம் அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 35). பா.ஜ.க.வின் ஆம்பூர் நகர இளைஞரணி தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.  இன்று காலையில் சங்கர், அதே பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் அருகே சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை, மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாள், பயங்கர ஆயுதங்களுடன் திடீரென வழி மறித்தது. சங்கரை உருட்டு கட்டையால் தாக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. சங்கரது தலையில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் நிலைகுலைந்து சுருண்டு விழுந்த சங்கரை, அந்த கும்பல் கொலை செய்யும் நோக்குடன் மேலும் வெட்ட முயன்றது.

இதை நேரில் பார்த்த சங்கரின் ஆதரவாளர்கள் விரைந்து ஓடி வந்தனர். இதையடுத்து, மூன்று பேர் கும்பல்  ஓடி தப்பிவிட்டது.

பலத்த காயமடைந்த சங்கர்  ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சங்கரை கொலை செய்ய முயன்ற கும்பல் யார்  என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பா.ஜ.க. பிரமுகரை கொலை முயன்ற சம்பவம் ஆம்பூரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான போலீசார்  அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தப்பி ஓடிய கொலையாளிகள் மூவரில் ஒருவரை   சற்று முன் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர் குறித்து தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.