சபரிமலைக்கு பெண்கள் செல்ல ஆதரவு தெரிவித்த பெண்கள் ஆசிரமம் தீ வைத்து எரிப்பு: பினராயி கண்டனம்

திருவனந்தபுரம்:

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள்  பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த, சந்தீப்பானந்தா பெண்கள் ஆசிரமத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீ வைப்பு சம்பவத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து கேரளாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பெண்கள் செல்லக்கூடாது என பெரும்பாலோர் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக பல இடங்களில் காவல்துறையினருக்கும், பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என திருவனந்தபுரத்தில் உள்ள  சந்தீப்பானந்தா பெண்கள் ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் மர்ம நபர்கள்  சந்தீப்பானந்தா பெண்கள் ஆசிரமத்திற்கு தீவைத்தனர்.இது பரபரப்பை ஏற்படுத்தியது. தீயில், ஆசிரமத்தில் நிறுத்தப்பட்டிருந்த  2 கார் மற்றும் இருசக்கரவாகனங்கள்  எரிந்து நாசமானது.

இந்த நிலையில் கேரளமுதல்வர் பினராயி விஜயன் தீயினால் பாதிக்கப்பட்ட ஆசிரமத்திற்கு வருகை தந்துஆறுதல் கூறினார். மேலும், தீ வைப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தவர், கேரளாவில் மதவாத சக்திகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்தார்.

இந்த சம்பவம் குறித்து சிறப்பு படை அமைக்கப்பட்டு  விசாரணை நடைபெற்று வருவதாக கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா கூறி உள்ளார்.