நாமக்கல்:

கவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் நாமக்கல் மதியழகன் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மரமத்தி வேலூர் பொத்தனூரை சேர்ந்தவர் மதியழகன். தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் மாநில பொதுச்செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.   தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல்வேறு ஊழல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர்.

இவரது நண்பர் பரமத்திவேலூர் பொன்னி நகரைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் மணி. மணியின் அலுவலகத்தில் நேற்று அவருடன் பேசிக்கொண்டிருந்தார் மதியழகன்.

அப்போது திடீரென வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இந்த கொலைவெறித் தாக்குதலில் இருவரும் நிலைகுலைந்து விழுந்தனர்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்தனர். இதனையடுத்து மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியது.

படுகாயமடைந்த இருரும்  நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். .  பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இச் சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதியழகன் குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பதாவது:

“தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக செயல்படுபவர் மதியழகன். ஆயிரத்துக்கும் அதிகமான தகவல்களை ஆர்.டி.ஐ மூலம்பெற்றிருக்கிறார். நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக சகாயம் இருந்தபோது, மாவட்டம் முழுவதும் ஆர்.டி.ஐ பயிற்சி அளிக்கும் நபராக மதியழகனை நியமித்திருந்தார்.

நாமக்கல் மாவட்டம் கபிலர் மலையில், இயங்கிக்கொண்டிருந்த காகிகத் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது.  ஆலையில் இருந்து கொட்டப்பட்ட திடக்கழிவுகள் ஒரு பெரிய மலைபோல குவிந்துவிட்டன நிலத்தடி நீரும் மாசடைந்தது. பெரிதும் பாதிக்கப்பட்டது. இதற்கு எதிராகப் போராடியதில் மதியழகன் முக்கியமானவர் ஆவார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், சாதாரண குடிமக்களும் அரசு அலுவலகங்களை ஆய்வுசெய்ய முடியும் என்பதை பலருக்கும் உணர்த்தியவர் மதியழகன்.  நாற்பதுக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களை மதியழகன் ஆய்வு செய்திருக்கிறார்.  காவல் நிலையத்தையும் ஆய்வு செய்து அங்கிருந்த பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர்.

சென்னையில் இருக்கும் ஆளுநர் மாளிகையையும் தகவல் ஆணையத்தையும் அவர் ஆய்வு செய்திருக்கிறார். ஜனாதிபதி மாளிகையை ஆய்வு செய்வதற்கான ஆணையைப் பெற்றுவைத்திருந்தார்.

ராசிபுரம் அருகே மோளப்பாளையத்தில் ஒரு மலையே சட்டத்துக்குப் புறம்பாக வெட்டி எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து மதியழகன்  போராடினார். இந்த விவகாரத்தில்  மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிலை ஏற்பட்டது.

முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரது ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் மதியழகன்.

இதற்கிடையே இவர் மீது குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டது.   ஒருவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றால், குறைந்தபட்சம் அவர் மீது மூன்று வழக்குகள் இருக்க வேண்டும் என்பது சட்டம். ஆகவே   மதியழகன் மீது அடுத்தடுத்து இரண்டு நாட்களில் நான்கு வழக்குகளைப் பதிவுசெய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். பிறகு சட்டப்போராட்டம் நடத்தி வெளியில் வந்தார்.

இந்த நிலையில்தான் மதியழகன் வேலூரில் கூலிப்படையினரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.