பாரிஸ் : ரஃபேல் ஒப்பந்த கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி

பாரிஸ்

ஃபேல் ஒப்பந்தத்தை கவனிக்கும் இந்திய விமானப்படையின் பாரிஸ் அலுவலகத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

இந்திய விமானப்படைக்காக அரசு 36 ரஃபேல் ரக விமானங்களை வாங்க பிரான்ஸ் நிறுவனமான டசால்ட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரம் பாஜகவின் ஆட்சியில் முடிந்தது. இந்த ஒப்பந்தத்தில் ரஃபேல் விமானங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுவதாகவும் இதன் கூட்டு நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஒப்பந்தம் செய்ததில் ஊழல் உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்திய விமானப்படை சார்பில் ஒரு அலுவலகம் பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நகரில் அமைந்துள்ளது. ரஃபேல் விமான கட்டுமான நிறுவனமான டசால்ட் அலுவலகத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் ரஃபேல் விமான உற்பத்தி நடவடிக்கைகள், விமானிகளுக்கு பயிற்சி உள்ளிட்ட பணிகள் கவனிக்கப் பட்டு வருகிறது. அத்துடன் ரஃபேல் விமான ஒப்பந்தத்தின் அன்றாட அறிக்கைகளையும் இந்த அலுவலகம் பதிவு செய்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த அலுவலகத்தை உடைத்து உள்ளே நுழைந்து சிலர் கொள்ளை நடத்த முயன்றுள்ளனர். இந்த அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணம் ஏதும் இல்லை. ஆகவே இந்த கொள்ளை முயற்சி ரஃபேல் ஆவணங்களை திருட நடந்திருக்கலாம் என அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இங்கிருந்து எதுவும் திருடப்படவில்லை எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டு காவல்துறை இந்த கொள்ளை முயற்சி குறித்து விசாரணை நடத்தி வருகிறது.