“என் குழந்தைக்கு 14 வயசுதான் ஆகுது. ஆனா செல்போன்ல என்னென்னமோ பண்ணுதுங்க..”

“என் பொண்ணு எப்பவும் செல்போன், கம்ப்யூட்டர்ல ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கா” – என்றெல்லாம் பெருமைப்படும் பெற்றோரா நீங்கள்?

அவசியம் இந்த செய்தியைப் படியுங்கள்.

இன்று பிரிட்டனில் 38 வயதான இந்தியர் கைது செய்யப்பட்டார். இவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?

தன் மகள் வயதுள்ள சிறுமியுடன் இணையத்தல் சாட் செய்து, அவள் மனதை மயக்கி சீரழிக்க முயன்றிருக்கிறார்!

கிழக்கு லண்டனில் உள்ள சிட்டி வங்கியில் வணிக மேலாளராக பணியாற்றி வந்தவர் இந்த நபர். பெயர், பாலசந்திரன் கவுங்கல்பாராம்பத்.  வயது 38. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியுடன் ஆன்லைனில் சாட்டிங்கில் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் இணையத்தை இடைமறிக்கும் குழுவினர் ஆன்லைன் சாட்டிங்கையும் கண்காணிக்கும் பணியை  மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைனில் சிறுவர் சிறுமியரிடம் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்பவர்களை கண்காணித்து பிடிப்பதுதான் இவர்களது முக்கிய பணி.

பாலசந்திரன் ஒரு 14 வயது சிறுமியுடன், கெட்ட நோக்குடன் சாட்டிங் செய்வதை இந்தக் குழுவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரது சாட்டிங்கை தொடர்ந்து  கண்காணிக்க தொடங்கினர்.

ஒரு கட்டத்தில், இந்த சாட்டிங்கை மறித்து அந்த சிறுமி சாட்டிங் செய்வது போல் பாலச்சந்திரனுடன் தொடர்ந்து சாட்டிங் செய்தனர்.

பிர்மிங்காம் நகருக்கு வந்து ஒரு ஓட்டலில் தான் அறையெடுத்து தங்குவதாகவும் அங்கு சிறுமி வரவேண்டும் என்றும் பாலசந்திரன் சாட் செய்தார். அதற்கு அந்த சிறுமி போலவே, சம்மதம் என்று பதில் அனுப்பினர் இடைமறிக்கும் குழுவினர்.

இதையடுத்து பாலச்சந்திரன் லண்டனில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பிர்மிங்காமிற்கு வந்து ஒரு ஓட்டலில் அறை எடுத்த தங்கினார். அப்பாவி சிறுமிக்காக காத்திருந்தார்.

ஆனால் அங்கு வந்த்து இணைய இடைமறிப்பு குழுவினர்!

பாலச்சந்திரன்

பாலசந்திரனை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை மேற்காண்டபோது,  முதலில் மறுத்தார்: ‘‘அந்த சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள நான் வரவில்லை. அவருடன் மதிய உணவு சாப்பிட தான் வந்தேன். அவர் 18 வயது நிரம்பியவர் என்று நினைத்தேன். அந்த சிறுமி தான் என்னை ஓட்டல் அறைக்கு வரும்படி அழைத்தார்’’ என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார்  பாலச்சந்திரன்.

ஆனால், குழுவினர் அவரது சாட்டிங் தகவல்கள் அனைத்தையும் முழுமையாக படித்து காண்பித்தனர். சாட்டிங்கின் போது‘‘ “நான் உனது அழகான கண்களை பார்க்க விரும்புகிறேன். உன்னை கர்ப்பமாக்க வேண்டும் என்பது எனது நோக்கம் கிடையாது. இந்த சந்திப்பு நமது காதலுக்கு ஆரம்பமாக இருக்கும்’’ என்று பாலச்சந்திரன் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினர்.

அதோடு, அவரது பையில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வைக்கும்படி குழுவினர் தெரிவித்தனர். அதில் ஒரு பெர்ஃப்யூம் மற்றும் ஒரு பாக்கெட் காண்டம் இருந்தது.

அதற்குமேல் பாலச்சந்திரனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

தனது துர்நோக்கத்தை ஒப்புக்காண்டார்.

“ என்னைக்  கைது செய்தீர்கள் என்றால் வேலை பறிபோய்விடும். நான் இந்த நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்” என்று கதறினார்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவருக்கு 15 மாத சிறைத் தண்டனை விதித்து பிர்மிங்காம் கிரவுன் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

பாலச்சந்திரனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவரது மனைவிக்கு குழுவினர் தகவல் அளித்தனர். கடந்த 2 மாதங்களாக பாலச்சந்திரன் ஆன்லைனில் மூழ்கி கிடந்தது தெரியவந்துது.

பிரிட்டனின் குற்றப் பதிவேட்டில் பாலச்சந்திரன் பாலியல் குற்றவாளியாக 10 ஆண்டுகளுக்கு இடம்பெறுவார். 15 மாத சிறைத் தண்டனைக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று சட்டநிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அவர் பணிபுரிந்துவந்த சிட்டி வங்கியில் இருந்து நிர்வாகம் வேலை நீக்கம் செய்துள்ளது.

இந்த சம்பவத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்…

அறியா வயது சிறுவர்கள் செல்போன், கம்ப்யூட்டரில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள் என்று பெற்றோர்கள் பெருமைப்பட வேண்டாம்.   பிள்ளைகள் கணினியில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிப்பது பெற்றோரின் முக்கிய கடமை.

தவிர, பிரிட்டன் போல ஆபாச சாட்டிங்கை கவனித்து நடவடிக்கை எடுத்து நமது பிள்ளைகளைக் காப்பாற்றும் நடைமுறை இங்கே இல்லை.

ஆகவே கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.. அவசியம்.