ஐதராபாத்:

இந்தியாவின் 400 விதமான நகைகள், தங்கத்திலான புராதனப் பொருட்கள் இந்திய மதிப்புக்கு ரூ. 758 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.


அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது கிறிஸ்டி ஏலம் விடும் நிறுவனம்.

உலகம் முழுவதும் உள்ள பழமையான, தொன்மைவாய்ந்த பொருட்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு ஏலம் விடப்படுகின்றன.
அந்த வகையில் ஐதராபாத் நிஜாம் மிர் ஓஸ்மான் அலி கானுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் 400 இந்திய நகைகள் மற்றும் புராதானப் பொருட்கள் கடந்த 19-ம் தேதி ஏலம் விடப்பட்டுள்ளன.

இதில், ஐதராபாத் நிஜாமின் சம்பிரதாய வாள் ரூ.13.4 கோடிக்கும், வைரங்கள் (52.58 காரட்) பதிக்கப்பட்ட கண்ணாடி இந்திய மதிப்புக்கு ரூ.45 கோடிக்கும் ஏலம் போயுள்ளன.

நிஜாமின் பொக்கிஷத்தில் இருந்த வைர நெக்லஸ் ரூ.17 கோடிக்கும் ஏலம் போயுள்ளன.

33 வைர நெக்லஸ்கள் மதிப்பிடப்பட்டதை விட அதிக விலைக்கு ஏலம் போயுள்ளதாக ஏலம் எடுத்தவர்கள் தெரிவித்தனர்.

ரூ.10.5 கோடிக்கு நிர்ணயிக்கப்பட்ட இந்த வைர நெக்லஸ்களை ரூ.17 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கிறிஸ்டி நடத்திய ஏலத்தை ஐதராபாத்திலிருந்து நிஜாம் குடும்பத்தார் ஆன்லைனில் பார்வையிட்டனர்.

ஏலம் போன பொருட்களின் மதிப்பு எவ்வளவு என அவர்கள் நேரிடையாக அறிந்து கொண்டனர்.
நிஜாமின் பேரன் நஜாப் அலி கான் கூறும்போது, வெள்ளை நிற நெக்லஸ் ஏலம் விடப்பட்டபோது அழுதுவிட்டேன் என்றார்.

ஆற்காடு நவாப்பின் 17 காரட் கோல்கொண்டா வைரம் ரூ.23.5 கோடிக்கு ஏலம் போனது.
இது குறித்து ஏலம் விட்ட நிறுவனமான கிறிஸ்டி கூறும்போது, இந்திய கலை மற்றும முகலாய பொருட்கள் தான் இந்தியாவிலேயே அதிக அளவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.

இந்த ஏலம் தொடர்ந்து 12 மணி நேரம் நடந்தது. இந்தியா மற்றும் 44 நாடுகளிலிருந்து ஏலம் எடுப்போர் பங்கேற்றனர்.

இந்த ஏலத்தில் ஜெய்ப்பூர், இந்தூர் மற்றும் பரோடா மன்னர் பரம்பரையினரும் ஏலம் கேட்டனர்.
இந்தூர் மகாராஜா யஷ்வந்த் ராவ் இரண்டாம் ஹோல்கருக்கு சொந்தமான நெக்லஸ் ரூ.42 லட்சத்துக்கு ஏலம் போனது.

மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கர் இங்கிலாந்தில் கல்வி பயின்றவர். இவர் தன் மனைவிக்கு ஏராளமான நகைகளை பரிசாக கொடுத்துள்ளார்.