மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு : பாஜக திட்ட ஆடியோ கசிவு

போபால்

த்தியப் பிரதேச காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க பாஜக திட்டம் தீட்டுவது போன்ற ஆடியோ வெளியானதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் முதல்வராகப் பதவி வகிக்கக் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது.  அக்கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா, துளசி சிலாவத் உள்ளிட்ட 22 பேர் விலகி பாஜகவில் இணைந்தனர்.  இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது     பாஜக சார்பில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் பதவி ஏற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இப்போதைய முதல்வர் சிவராஜ் சிங் பேசியது போன்ற ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி மாநிலம் எங்கும் பரவி வருகிறது.  இதுவரை இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.   இந்த ஆடியோ மத்தியப் பிரதேச அரசியல் உலகில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

அந்த ஆடியோவில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ”மத்திய தலைவர்கள் அரசைக் கலைக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளனர்.  அவ்வாறு நட்க்கவில்லை என்றால் அது அனைத்தையும் சீரழித்து விடும்.  நீங்கள் சொல்லுங்கள்,  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, துளசி சிலாவத் போன்றோர் இல்லாமல் ஆட்சியைக் கலைக்க முடியுமா? வேறு வழி எனக்கு தெரியவில்லை” எனக் கூறுகிறார்.

அந்த ஆடியோவில் முதல்வர் கூறுவதாக உள்ளது போலவே பிறகு ஜோதிரதித்ய சிந்தியா உள்ளிட்டோர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால் ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஆடியோ குறித்து காங்கிரசின் நரேந்திர சலூஜா, “முதல்வர் சிவராஜ் சிங் சவுகானே கூறிய உண்மையின் படி கமல்நாத் அரசைக் கவிழ்த்ததில் பாஜகவுக்குப் பங்கு உள்ளது. அத்துடன் பாஜக மத்திய தலைமை காங்கிரஸ் அரசைக் கலைக்க முடிவு எடுத்தது என்பதும் இதன் மூலம் உறுதி ஆகி உள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக இந்த குற்றச்சாட்டை மறுத்த போதிலும் ஆடியோ விவகாரம் அரசியல் உலகில் பரபரப்பை உண்டாக்கி வருகிறது.