சென்னை

மிழக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் காப்பகங்களிலும் பெற்றோர்களின் பொருளாதார வசதிகள் குறித்து தணிக்கை செய்ய உள்ளது.

கடந்த சில மாதங்களாகக் குழந்தைகள் காப்பகங்களில் உள்ள குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப் படுவதாகச் செய்திகள் வெளியாகின. அதையொட்டி நாட்டில் உள்ள குழந்தைகள் காப்பகங்கள் எண்ணிக்கை குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் 9589 குழந்தைகள் காப்பகம் இயங்கி வருவதும் இதில் தமிழகத்தில் அதிக அளவில் காப்பகங்கள் இருப்பதும் தெரிய வந்தது.

தமிழகத்தில் உள்ள 1647 குழந்தைகள் காப்பகங்களில் 87000க்கும் அதிகமான குழந்தைகள் வசிக்கின்றனர். இவர்களில் 5994 குழந்தைகள் ஆதரவற்றவர்கள், 217 பேர் அடைக்கலம் புகுந்தவர்கள் மற்றும் 30000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள் ஆவார்கள். இவர்களைத் தவிர 50000 குழந்தைகளின் பெற்றோரால் தங்கள் குழந்தைகளை பாராமிரிக்க வழியின் றி உள்ளதால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் ஒரு சில குழந்தைகளின் பெற்றோர் மற்றும் காப்பாளர்கள் குழந்தைகளைப் பராமரிக்க வசதி இருந்தும் குழந்தைகளைக் காப்பகங்களில் சேர்த்து விடுவதாக அறியப்பட்டுள்ளது. எனவே இந்த காப்பகங்கள் குறித்துத் தணிக்கையைத் தமிழக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்ள உள்ளது. இந்த ஆணைய அதிகாரிகள் கன்யாகுமரி, மதுரை, திருச்சி மற்றும் சென்னை மாவட்டங்களில் தணிக்கை நடத்த உள்ளனர். அதன் பிறகு மற்ற மாவட்டங்களிலும் தணிக்கை தொடரப்பட்டு வரும் அக்டோபர் இறுதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து ஆணையத் தலைவர் நிர்மலா, ”இந்த தணிக்கையினால் எந்த குழந்தையும் பாதிப்பு அடையாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனது குடும்பத்துடன் வசிக்க உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது. குழந்தைகளின் இந்த உரிமையை மீறி அவர்கள் விருப்பத்துக்கு மாறாகக் காப்பகங்களில் தங்க வைக்கக் கூடாது அதற்குப் பொருளாதாரம் தடையாக இருந்தால் ஆணையம் அந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து பெற்றோர்களுக்கு உதவ உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.