ஜெ. ஆட்சி வெள்ளம்…  அரசின் தவறுகளே காரணம்: தணிக்கைத்துறை குற்றச்சாட்டு

2015-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் அரசின் பலவித  தவறுகளாலேயே  ஏற்பட்டதாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நீர்நிலை மேலாண்மை குறித்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீர் வழிகளை ஒட்டி கட்டுமானங்களை முறைப்படுத்துவதற்காக வெள்ளத் தாழ் நிலங்களை வரையறை செய்ய அரசு முயலவில்லை. சி.எம்.டி.ஏ. தாராளமாக கட்டுமானத்தை அனுமதித்ததால், மழை நீர் நிலத்திற்குள் இறங்குவது குறைந்தது. இதுவே 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நீர் தேங்குவதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

ஏரிகளை ஆக்கிரப்பிலிருந்து பாதுகாப்பதற்கு 2007-இல் சட்டம் இயற்றப்பட்ட போதிலும் ஆக்கிரமிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வந்தது. இயற்கையான நீர்நிலைகளுக்கு உண்டாக்கும் சேதத்தை கவனத்தில் கொள்ளாமல், உள்ளாட்சி அமைப்புகளும் அரசு முகமைகளுமே பொது உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்தன
மேலும் பீர்க்கன்காரணை ஏரி பாழாவதற்குக் காரணம்  அரசின் தாமதமான நடவடிக்கையே.

. பீர்க்கன்காரணை பேரூராட்சி, திடக்கழிவு மேலாண்மை அமைப்பை நிறுவ நிலம் ஒதுக்க மாவட்ட ஆட்சியரிடம் 2004ம் ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது.  .

பேரூராட்சி பீர்க்கன்காரணை ஏரியினுள் 0.20 ஹெக்டேர் பரப்புள்ள இடத்தில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பை 2005ல் நிறுவியது. திடக்கழிவு மேலாண்மை அமைக்க, தகுந்த நிலத்தை கண்டறிந்து ஒதுக்கீடு செய்ய 12 ஆண்டு காலம் எடுத்துக்கொண்ட மாவட்ட ஆட்சியரின் தாமதமான நடவடிக்கையும் பீர்க்கன்காரணை ஏரி பாழ்பட காரணமாக அமைந்தது.

 

 

2015ம் ஆண்டை போன்ற மேலும் ஒரு இயற்கை அழிவு ஏற்படாமல் தடுக்க இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை முக்கிய பரிந்துரைகளை வெளியிட்டு இருக்கிறது.

1. வெள்ள சமவெளி மண்டலம் பற்றிய சட்டத்தை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நீர் நிலைகளை ஒட்டிய கட்டிட பணிகளை  சி.எம்.டி.ஏ. அனுமதிக்க கூடாது.

3. நிபந்தனை அடிப்படையிலான அனுமதி வழங்கும் முறை இனி நிறுத்தப்பட வேண்டும்.

4. நீர்வழிகளை ஒட்டியும், நீர்நிலைகளுக்குள்ளும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அனைத்து துறைகள் இடையே ஒருங்கிணைப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

5. மழை நீர் வடிகால் பிணையமைப்பின் விரிவாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

6. அணைகளுக்கான அவசரகால செயல் திட்டம் பணி முன்னுரிமை அடிப்படையில் முடிக்கப்பட வேண்டும்.

7. பேரிடர் மேலாண்மைக்கு என தனி நிதியை, தன்னாட்சியுடன் கூடிய நிறுவன கட்டமைப்பை அரசு உருவாக்க வேண்டும்” – ஆகிய பரிந்துரைகளை கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை  தெரிவித்துள்ளது.