சென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை  நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2017ம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் இன்று வரை அரசியல் கட்சியை அறிவிக்கவில்லை. கட்சி தொடங்குவது பற்றி எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

ஆகையால் அவர் அரசியலில் நுழைவாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த சூழலில் அவர் வெளியிட்டது போன்று ஒரு கடிதம் இணையத்தில் அண்மையில் வெளிவந்தது. அதில் கொரோனா சூழல் காரணமாக அரசியல் நிலைப்பாடு குறித்து பின்னர் அறிவிப்பதாகவும், உடல்நிலை பற்றியும் சில முக்கிய தகவல்களும் இடம்பெற்றிருந்தன.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கடிதம் பற்றி விளக்கம் அளித்த ரஜினி, அதில் உள்ள தகவல்கள் உண்மை என்றும் ஆனால் அது எனது கடிதம் அல்ல என்றும் விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தின் எதிரொலியாக, ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்.

இந் நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நீடித்தது. நடப்பு அரசியல், உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.