சென்னை:

த்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் அடுத்த மாதம் 8ந்தேதி கடை அடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டியை மாற்றி அமைக்க வலியுறுத்தி வரும் 8ந்தேதி (ஆகஸ்டு)  மாநில அளவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

நேற்று வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு அனைத்துத் தொழில் மற்றும் வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது  விக்கிரமராஜா இதை தெரிவித்திருந்தார்.

அப்போது,  மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி-ல் வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இந்த வரி விகிதங்களை கட்டாயம் மாற்றி அமைத்தால்தான் வியாபாரம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் குடிநீரில்லாமல் அவதிப்படும் சூழ்நிலையில், தனியார் குடிநீர் பாட்டில்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஒவ்வொரு பொருள்களுக்கும் குறிப்பிட்ட அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 160 நாடுகளில் ஜிஎஸ்டி குறைந்த வரி விகிதத்திலேயே அமலில் உள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்பட்டு, அதற்கு மாநில அரசும் ஆதரவு அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் 21 கோடி வணிகர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் ஜிஎஸ்டி குறித்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு செய்து முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி ஆகஸ்ட். 8-ம் தேதி மாநில அளவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.