Random image

மியான்மரில் 2 பத்திரிக்கையாளர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது சரியே….ஆங் சான் சூகி

வியட்னாம்:

மியான்மரில் கடந்த ஆண்டு ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து 7 லட்சம் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். ரோஹிங்கியா தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்ப்டடது. இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த வா லோனி மற்றும் கியாவ் சோ உ ஆகிய 2 பத்திரிக்கையாளர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 3ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இவர்கள் ராக்ஹினே மாநிலத்தில் இன் தின் என்ற கிராமத்தில் ரோஹிங்கியா ஆண்கள் கொல்லப்பட்டது தொடர்பான புலன் விசாரணையில் அரசு ரகசியங்களை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த இருவரும் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள். இந்த குற்றச்சாட்டை மறுத்த இருவரும், இது போலீசார் திட்டமிட்ட சதி என்று தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு ஒரு சாட்சியையும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இரு பத்திரிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆங் சான் சூகி நியாயப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வியட்நாமில் நடந்த சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘ரோஹிங்கியா பிரச்னையை வித்தியாசமான முறையில் எங்களது அரசு கையாண்டுள்ளது. பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் சட்டத்தை மீறியுள்ளனர் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல் முறையீடு செய்ய முழு உரிமை உள்ளது. இந்த தீர்ப்பில் என்ன தவறு உள்ளது ?என்ற விபரங்களை அவர்கள் தெரிவிக்கலாம்’’ என்றார். இந்த இனப் படுகொலை குறித்து விசாரிக்க மியான்மர் உயர் ராணுவ அதிகாரிகளை ஐக்கிய நாடுகள் சபை அழைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.