ஸ்மித்தின் இரட்டை சதத்தால் 497 ரன்களுக்கு ஆஸ்திரேலியா டிக்ளேர்..!

லண்டன்: ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து, 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

தனது பழைய அதிரடி ஃபார்முக்கு திரும்பியுள்ள அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித், 211 ரன்களை விளாசி இரட்டை சதம் பதிவு செய்தார். அதில் 24 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடக்கம். மேலும் டிம் பெய்னே மற்றும் மிட்செல் ஸ்டார்க் போன்றோரும் அரைசதம் அடித்தனர்.

இதனால், 126 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 497 ரன்களை எட்டியது. அத்துடன் டிக்ளேர் செய்துவிட்டது. இங்கிலாந்து தரப்பில் மொத்தம் 7 பவுலர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

ஸ்டூவர்ட் பிராட்டிற்கு அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்ளும், லீச் மற்றும் ஓவர்டன் ஆகியோருக்கு தலா 2 விக்கெட்டுகளும் கிடைத்தன.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியால் 10 ஓவர்கள் மட்டுமே ஆட முடிந்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 23 ரன்களை எடுத்துள்ளது. பாட் கம்மின்ஸ் 1 விக்கெட் கைப்பற்றினார்.

மூன்றாம் நாள் ஆட்டத்தைப் பொறுத்தே இந்தப் போட்டி எந்த திசையில் செல்லும் என்பதை கணிக்க இயலும்.