பெங்களூர்,

ந்தியா – ஆஸ்திரேலியா இடையே யான 2வது டெஸ்ட் மேட்சின் 3வது நாள் ஆட்டம் நேற்று விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.

இந்திய வீரர்கள் ரகானே – புஜாரா இணை நிதானமாக விளையாடி வருகிறார்கள். இந்த டெஸ்ட் மேட்சை கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணி வீரர்களின் விளையாட்டு இருந்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்துள்ளது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா  276 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஜடேஜா 6 விக்கெட் எடுத்திருந்தார். இந்தியா பேட் செய்தபோது  ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் லயன் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 189 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி வெளியேறியது. ‘

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்திருந்தது. மேத்யூ வேடு 25 ரன், ஸ்டார்க் 14 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. ஸ்டார்க் 26 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ஜடேஜாவிடம் பந்தை பறிகொடுத்தார்.

மேத்யூ வேடு 40 ரன் (113 பந்து, 4 பவுண்டரி), நாதன் லயன் 0, ஹேசல்வுட் 1 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஓ கீப் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 6, அஷ்வின் 2, இஷாந்த், உமேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 7 ரன்னுக்கு கடைசி 4 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து, 87 ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது.

ராகுல் – முகுந்த் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்தது. முகுந்த் 16 ரன் எடுத்து கிளீன் போல்டானார். அடுத்து ராகுல் – புஜாரா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்தது. ராகுல் 51 ரன் எடுத்து ஓ கீப் சுழலில் சிக்கி ஸ்மித் வசம்  பந்தை கேட்ச் கொடுத்தார்.

கேப்டன் கோஹ்லி 15 ரன், ஜடேஜா 2 ரன் எடுத்து வந்த வேகத்தில் வெளியேற, இந்தியா 38.1 ஓவரில் 120 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து மீண்டும் தடுமாறத் தொடங்கியது.

அதையடுத்து களமிறங்கிய  புஜாரா – ரகானே ஜோடி பொறுப்புடன்  விளையாடி வருகின்றனர். அவர்களின் நிதானமான ஆட்டம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

புஜாரா அரை சதம் அடித்து களத்தில் சிங்கமாக இருக்கிறார். இந்த இணையை  பிரிக்க ஆஸி. பந்துவீச்சாளர்கள் கடும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனாலும், புஜாராவின் பொறுப்பான ஆட்டத்தின் காரணமாக மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்துள்ளது.

புஜாரா 79 ரன் (173 பந்து, 6 பவுண்டரி), ரகானே 40 ரன்னுடன் (105 பந்து, 3 பவுண்டரி) களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, இந்தியா 126 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று பரபரப்பான 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.