ஆஸ்திரேலியா அட்டகாசம் – இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டில் வென்று கோப்பையை ஏந்தியது!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.

இங்கிலாந்து நிர்ணயித்த 303 ரன்கள் என்ற இலக்க‍ை விரட்டியபோது, வெறும் 80 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், இந்த அட்டகாச வெற்றியை அடைந்துள்ளது ஆஸ்திரேலியா.

அணியின் முதல் 5 பேட்ஸ்மென்களும் விரைவாக வெளியேறிய நிலையில், கோப்பையை வெல்வதற்கு நாங்கள் பொறுப்பு என்று ஆடத்தொடங்கினர் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரேயும், ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெலும்.

கேரே 114 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 106 ரன்களை குவித்தார். மேக்ஸ்வெல் 90 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 108 ரன்களை வெளுத்தார். நேற்று இத்தகைய ஒரு பார்ட்னர்ஷிப்தான் ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்பட்டது.

அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட வெற்றியை தொட்டுவிட்டு அவுட்டாக, கடைசியில் கம்மின்ஸ் 4 ரன்களும், ஸ்டார்க் 11 ரன்களும் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தனர்.

முடிவில், ஆஸ்திரேலியா, 49.4 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை எடுத்து கோப்பையைத் தட்டிச் சென்றது. ஒருநாள் ‍தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.