உலகக்கோப்பை டி20 போட்டி – இலங்கையை வென்ற ஆஸ்திரேலியா!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பை லீக் போட்டி ஒன்றில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது ஆஸ்திரேலியா.

டாஸ் வென்ற இலங்க‍ை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால், அந்த அணி எதிர்பார்த்தது போன்று எதுவும் நடக்கவில்லை. அந்த அணியின் ஜெயங்கனி மற்றும் சுரங்கிகா ஆகியோர் தலா 38 ரன்களை அதிகபட்சமாக அடித்தனர்.

கெளசல்யா 16 ரன்களை அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி எடுத்தது 123 ரன்கள் மட்டுமே. அந்த அணியின் இரண்டு பேர் ரன்அவுட் ஆயினர்.

பின்னர், எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீராங்கனை ஏஜே ஹீலே 12 ரன்களில் அவுட்டாக, வில்லானி மற்றும் லேனிங் ஆகியோர் பதற்றமின்றி ஆடி, இருவருமே அரைசதங்கள் அடித்தனர்.

முடிவில் 17.4 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து ஆஸ்திரேலிய அணி, 125 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.