தொடர்ந்து வெல்லும் ஆஸ்திரேலியா – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

லண்டன்: ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 334 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 45.5 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 153 ரன்களை விளாசினார். ஸ்மித் 73 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 25 பந்துகளில் 46 ரன்களை தன் பங்காக சேர்த்தார்.

பின்னர் ஆடத்தொடங்கிய இலங்கை அணியில், கேப்டன் கருணாரத்னே அதிகபட்சமாக 97 ரன்களை அடித்தார். சதமடிக்கும் வாய்ப்பை வெறும் 3 ரன்களில் துரதிருஷ்டவசமாக நழுவவிட்டார்.

குசால் பெரேரா பொறுப்பாக ஆடி 52 ரன்களை சேர்த்தார். துவக்க வீரர்களான இவர்கள் இருவரின் ஆட்டத்தைப் பார்த்தவர்கள், இலங்கை அணி வெல்லும் என்றே நினைத்திருப்பார்கள். ஆனால், இவர்கள் இருவரும் வெளியேறிய பின்னர், அனைத்துமே மாறிவிட்டது.

இவர்களைத் தவிர, குசால் மெண்டிஸ் மட்டுமே 30 ரன்கள் என்ற சற்றே சுமாரான ரன்களைத் தொட்டார். அதற்கடுத்து இரட்டை இலக்கம் என்று பார்த்தால் திரிமன்னே 16 ரன்களை எடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கம்தான். பிரதீப் மட்டும் டக் அவுட்.

ஆஸ்திரேலியா தரப்பில் மிச்செல் ஸ்டார்க் அருமையாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை அள்ளினார். கேன் ரிச்சர்ட்ஸன் தன் பங்காக 3 விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டார். மேக்ஸ்வெல் மட்டுமே ஏமாந்த பிள்ளையாக மாறிப்போனார். 46 ரன்களைக் கொடுத்த அவருக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.