ஒருநாள் தொடர் – தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ் ஆன ஆஸ்திரேலியா!

கேப்டவுன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியையும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடரை முழுமையாகக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க அணி.

ஏற்கனவே, முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் அந்த அணி வென்றிருந்தது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், மார்னஸ் லபுஷனே சதமடித்தார். ஷார்ட் 36 ரன்களையும், மார்ஷ் 32 ரன்களையும் அடித்தனர்.

மற்ற பேட்ஸ்மென்கள் சோபிக்காத காரணத்தால், 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து, ஆஸ்திரேலிய அணியால் 254 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனையடுத்து எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணிக்கு, ஜேஜே ஸ்மட்ஸ் 84 ரன்களையும், கைல் 50 ரன்களையும், கிளாசன் 68 ரன்களையும் அடித்துக் கொடுத்து வெற்றிக்கு பேருதவி புரிந்தனர்.

45.3 ஓவர்களிலேயே, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த தென்னாப்பிரிக்க அணி 258 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.