ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் ஏழு வயது சிறுவன்!

ந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஏழு வயது  ஆர்ச்சி சில்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் துவங்க இருக்கிறது.  இதற்கான ஆஸ்திரேலிய அணியில், 15வது கவுரவ வீரராக சில்லர் இடம் பெற்றுள்ளார்.

சில்லருக்கு வயது ஏழுதான். அவர் மூன்று மாத குழந்தையாக இருக்கும் போதே  இருதய வால்வில் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதை சரிவ செய்வதற்காக அவருக்கு  இதுவரை 13 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

உடல்நிலை காரணமாக  சில்லரால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. நேரம் கிடைக்கும் போது கிரிக்கெட் மட்டும் விளையாடுவார். ஷேன் வார்னேவின் தீவிர ரசிகரான இவர் ஒரு லெக் ஸ்பின்னர். இந்திய கேப்டன் கோலியை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்பது இவரது லட்சியம்.

இப்படி கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம்கொண்ட  சில்லருக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.  தனது விருப்பத்தை தந்தையிடம் கூறினார்.  இத்தகவல், சேவை அமைப்பு மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டிடம் தெரிவிக்கப்பட்டது. இவரது விருப்பத்தை நிறைவேற்ற நிர்வாகிகள் முடிவு செய்தனர். மெல்போர்ன் யாரா பார்க்கில் நேற்று நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியில் சில்லர் இடம் பெறுவதை கேப்டன் டிம் பெய்ன் அறிவித்தார். சில்லருக்கு கோலி வாழ்த்து தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர்,  “வாழ்க்கையில் பெரும்பாலான நேரத்தை மருத்துவமனை படுக்கையில் செலவழித்திருக்கிறார் சில்லர். இவரது முகத்தில் புன்னகை பூக்கச் செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும்” என்றார்.

கேப்டன் டிம் பெய்னுடன் சேர்ந்து சில்லரும் இணை கேப்டனாக செயல்பட  இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.