சிட்னி:

ரவி வரும் காட்டுத்தீ காரணமாக,  ஆஸ்திரேலியத் தலைநகர்  கான்பராவில் 72 மணி நேரம் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்டைய நாடுகளை அச்சுறுத்தி வரும் ஆஸ்திரேலிய காட்டுத்தீ கடந்த  ஓரிரு மாதங்களாக எரிந்து வருகிறது.  இதன் காரணமாக  ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை முழுவதும்எரிந்து நாசமாகி உள்ளது. இந்த காட்டுத் தீக்கு இதுவரை 33 பேர் பலியான நிலையில், சுமார்  1 பில்லியன் பூர்வீக விலங்குகளையும் கொன்றுள்ளது. மேலும், 11.7 மில்லியன் ஹெக்டேர் (117,000 சதுர கி.மீ) க்கும் அதிகமான இடங்கள் தீக்கிரையாகி உள்ளது, மேலும்,  2,500 வீடுகளும் எரிந்து நாசமாகி உள்ளது.

இந்த தீயை கட்டுப்படுத்த பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும்,காட்டுத்தீயின் தாக்கத்தை கட்டுப் படுத்த முடியவில்லை.  பல நாட்களாக தீ  எரிந்துவருவதால் தலைநகர் கான்பராவில்  அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

உயர்ந்து வரும் வெப்பநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, தலைநகரான கான்பெர்ரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி அங்குள்ள சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

கான்பெராவை சுற்றி  185 சதுர கி.மீ.க்கு தீ எரிந்து வருவதாகவும்,  இது பிரதேசத்தின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 8% என்று தெரிவித்துள்ள அதிகாரிகள்,  “இந்த தீ மிகவும் கணிக்க முடியாததாக மாறக்கூடும், இது கட்டுப்பாடற்றதாக மாறக்கூடும்” என்று கூறியுள்ளனர்.

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் வழியாக வார இறுதியில் வெப்ப அலை நிலைகள் பரவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் உருவாகும்,  கடும் வெப்பம், காற்று மற்றும் வறண்ட நிலப்பரப்பு ஆகியவற்றின் கலவையானது கான்பெர்ராவின் தெற்கில் உள்ள புறநகர்ப் பகுதிகளுக்கு ஆபத்தை கொடுக்கும் வாய்ப்பு இருப்பதால், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கான்பெராவில்  ஆஸ்திரேலியாவின் கூட்டாட்சி பாராளுமன்றம் அமைந்துள்ளது, மேலும்  பல அரசு மற்றும் சுயாதீன நிறுவனங்கள் மற்றும் தேசிய அருங்காட்சியகங்களுக்கும் இங்கு உள்ளது. ஏற்கனவே கடந்த  2003ஆண்டு எற்பட்ட  கான்பெர்ரா தீ விபத்தில் நான்கு பேர் இறந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 500 வீடுகள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.