டிரென்ட்பிரிட்ஜ்: ஆஸ்திரேலியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில், 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 381 ரன்களை விளாசித் தள்ளி விட்டது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 147 பந்துகளை சந்தித்து 166 ரன்களை அடித்து நொறுக்கினார். கேப்டன் ஃபின்ச் 53 ரன்களும், உஸ்மான் குவாஜா 89 ரன்களும் அடித்தனர்.

கிளென் மேக்ஸ்வெல் வெறும் 10 பந்துகளில் 32 ரன்களை அடித்தார். தனது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி, பெரிய இலக்கை நினைத்து தடுமாற்றத்திலேயே குறைந்த ரன்களில் சுருண்டுவிடும் என்றுதான் பலரும் நினைத்திருப்பர். ஆனால், தாங்கள் சாதாரணமானவர்கள் அல்ல என்பதை அந்த அணியினர் நிரூபித்தனர்.

அந்த அணியின் ரஹீம் 102 அடிக்க, தமிம் இக்பால் 62 ரன்களையும், முகமதுல்லா 69 ரன்களையும் அடிக்க, மொத்தம் 333 ரன்களை பதிலடியாக எடுத்தது வங்கதேசம். ஷாகிப் அல் ஹசன் 41 ரன்களை விளாசினார்.

வங்கதேசம் இந்தளவிற்கு பதிலடி தரும் என்று ஆஸ்திரேலியா மட்டுமல்ல, யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஒருவேளை வங்கதேசம் இன்னும் சற்று எச்சரிக்கையாக பந்துவீசி, ஆஸ்திரேலியாவை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால், இப்போட்டியில் வங்கதேசம் ஜெயித்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கூறலாம்.

இந்த உலகக்கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற பெரிய அணிகளைவிட, வங்கதேசம் சிறப்பாகவே ஆடிவருகிறது எனலாம்.