ஆஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 3,000 அகதிகள் தடுத்து நிறுத்தம்

ஆஸ்திரேலிய எல்லைகளின் இறையாண்மையை பாதுகாக்கும் நடவடிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் அந்நாட்டுக்கு வர முயன்ற 3300 அகதிகள் மற்றும் தஞ்சம் கோரி வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

refugees

2013க்கு முன்னர் இலங்கை, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள் என போரை எதிர்கொண்ட நாட்டின் ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில் கரை ஒதுங்கியது அந்நாட்டிற்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்த 5 ஆண்டுக்காலத்தில் ஆட்கடத்தல் தொடர்பான 600க்கும் மேற்பட்ட கைதுகள் நடந்துள்ளன. அதில் இலங்கையில் மட்டும் 500 கைதுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ஆட்கடத்தல் தொடர்பான கைதுகள் நடத்தப்பட்டுள்ளன.

2013ம் ஆண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வந்த நடவடிக்கையின் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் வர முயன்ற 33 படகுகள் நடுக்கடலில் தடுக்கப்பட்டு 800 அகதிகள் மற்றும் தஞ்சம் கோரி வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவை நோக்கி படகுகளில் வர முயன்ற 2525 அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கையின் காரணமாக ஆபத்தான கடல் பயணங்களிலிருந்து பல உயிர்களை காப்பாற்றி இருப்பதாக ஆஸ்திரேலிய அரசு சொல்லிவரும் நிலையில், ஐ.நா.மற்றும் பல மனித உரிமை அமைப்புகள் இக்கொள்கையை மனிதாபிமானமற்ற நடவடிக்கை என விமர்சித்து வருகின்றது.