வீரர்களுக்கு கொரோனா அறிகுறி – ஆஸி. vs நியூசி. ஒருநாள் தொடர் ரத்து!

சிட்னி: ஆஸ்திரேலியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர் நடந்துவரும் நிலையில், வீரர்கள் சிலருக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறி காரணமாக, போட்டித் தொடர் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய நாட்டில் இத்தொடர் நடைபெறுகிறது. தற்போது முதல் போட்டி முடிவடைந்துள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்ட நிலையில், நியூசிலாந்து வீரர் பெர்குசனுக்கும் கொரோனா அறிகுறி ஏற்பட்டது.

அவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், நியூசிலாந்து நாட்டில் கொரேனா பரவத் தொடங்கியுள்ள நிலையில், அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அண்டை நாடான ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து நியூசிலாந்திற்கு வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆஸ்திரேலியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நியூசிலாந்து வீரர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், நியூசிலாந்தில், இந்த இரு அணிகளுக்கு நடக்கவிருந்த டி-20 தொடரும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.