சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா வெற்றி பெறுவதற்கு 407 ரன்களை இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எடுத்துள்ளது. நாளை ஒருநாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணி வெற்றிபெற இன்னும் 309 ரன்களை எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன.

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில், லபுஷேன், ஸ்மித், கேமரான் கிரீன் ஆகியோர் பெரிய அரைசதம் அடித்தனர். இதனால், அந்த அணியின் ஸ்கோர் பெரியளவில் அதிகரித்தது.

இந்திய அணியின் மிக முக்கியப் பந்து வீச்சாளரான ஜடேஜா காயத்தால் விளையாட முடியாத சூழலில், ஆஸ்திரேலியா பெரிய நெருக்கடி இல்லாமல் ரன் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில், 6 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்திருந்தபோது, மொத்தமாக 406 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது ஆஸ்திரேலியா.

சவாலான சூழலில் தனத இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணிக்கு ரோகித் ஷர்மாவும், ஷப்மன் கில்லும் சுமாரான துவக்கம் அளித்தனர். ரோகித் ஷர்மா 52 ரன்கள் அடித்தும், கில் 31 ரன்கள் அடித்தும் அவுட்டாயினர்.

தற்போது, புஜாரா 9 ரன்களுடனும், ரஹானே 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இப்போட்டியில் வெற்றிபெற வேண்டுமெனில், இந்திய பேட்ஸ்மென்கள் மிகவும் மனோதிடமுள்ள ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.