ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் – ரோகித்தும் இஷாந்தும் பங்கேற்க வாய்ப்பில்லை?

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவும், பவுலர் இஷாந்த் ஷர்மாவும் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது காயமடைந்து, அதற்கான பிரத்யேகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அவர்கள், டெஸ்ட் தொடர் துவங்கும் டிசம்பர் 17ம் தேதிக்குள் தயாராக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டிலும், இரண்டாவது போட்டி மெல்போர்னிலும், மூன்றாவது போட்டி சிட்னியிலும், நான்காவது போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறுகின்றன. முதல் டெஸ்ட் போட்டியுடன், கேப்டன் விராத் கோலி நாடு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில், அவருக்குப் பதிலாகத்தான் ரோகித் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கு தற்போது நிலைமை சிக்கலாகியுள்ளது. ரோகித்தைப் போலவே, இஷாந்த் ஷர்மாவும், பெங்களூரிலுள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் காயத்திற்காக பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர்கள் இருவரின் உடல்நிலையைப் பரிசோதித்த நிபுணர்கள், இவர்களின் நிலை குறிப்பிட்ட காலத்திற்குள் சரியாகாது என்பதை அறிந்து, அதுதொடர்பான தகவலை பிசிசிஐ அமைப்பிற்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.