சிட்னி: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை 279 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றி, நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா வந்த நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வென்ற நிலையில், மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்றது.

தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 454 ரன்கள் எடுக்க, நியூசிலாந்தின் பதில் எண்ணிக்கை 256 மட்டுமே. பின்னர் 198 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலியா, 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்திருந்தபோது, எதிரணிக்கு 416 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து டிக்ளேர் செய்தது.

ஆனால், கடின இலக்கை விரட்டிய அந்த அணிக்கு சிறிதேனும் ஆறுதல் அளித்தவர் கிராண்ட்ஹோம் மட்டுமே. அவர் அடித்தது 52 ரன்கள். இதற்கடுத்த அதிகபட்ச ரன்கள் ராஸ் டெஸ்லர் அடித்த 22 ரன்கள்.

மொத்தத்தில் 136 ரன்களுக்கு மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டது நியூசிலாந்து. ஆஸ்திரேலியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் லயனுக்கு 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க்குக்கு 3 விக்கெட்டுகளும் கிடைத்தன.