ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியை, 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி.

மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஆஸ்திரேலியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. இந்நிலையில், 4வது ஆட்டம் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 55 பந்துகளில் 4 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 79 ரன்களை விளாசினார். ஆனால், வேறுயாரும் சோபிக்கவில்லை.

கடைசியாக, 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா.

பின்னர், சற்று எளிய இலக்க‍ை விரட்டிய நியூசிலாந்து அணியில், தேவைக்கேற்ப எந்த பேட்ஸ்மேனும் ஆடவில்லை. பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் மட்டும் அதிகபட்சமாக 30 ரன்களை சேர்த்தார்.

இறுதியில், 18.5 ஓவர்களில், 10 விக்கெட்டுகளையும் இழந்து, 106 ரன்கள் மட்டுமே எடுத்து, 50 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை எட்டியது ஆஸ்திரேலியா.

ரிச்சர்ட்ஸன் 3 விக்கெட்டுகளும், ஆஷ்டன் ஆகர், ஆடம் ஸம்பா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் க‍ைப்பற்றினர்.

தற்போதை நிலையில், தொடர் 2-2 என்று சமநிலையில் உள்ளது. கோப்பை யாருக்கானது என்பதை தீர்மானிக்கும் 5வது போட்டி, மார்ச் 7ம் தேதி நடைபெறுகிறது.