சிட்னி: நியூசிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் மார்னஸ் ஆகியோர் அரைசதமடித்தனர்.

அதேசமயம், மற்றவர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே, 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா.

நியூசிலாந்தின் தரப்பில் இஷ் சோடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எளிய இலக்க‍ை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, மிகவும் தடுமாறியது. அந்த அணியின் மார்ட்டின் குப்தில் அடித்த 40 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள். டாம் லாதம் 38 ரன்களையும், கிராண்ட்ஹோம் 25 ரன்களையும் அடித்தனர்.

இறுதியில் 41 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி, அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் மற்றும் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் மற்றும் ஸம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது அந்த அணி.